|
சமூக நீதி கூடப் பலவிதமான முட்டுக்கட்டைகளைக் கடந்த பிறகே வந்தடைகிறது.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கான அங்கீகாரம் கூட அப்படிப்பட்ட ஒன்றுதான்.
2006ல் மத்திய அரசு இதற்கான சட்டத்தைக் கொண்டுவந்து, பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அமல்படுத்தத் தயாரானதும், அதை எதிர்த்து வட மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. உச்சநீதி மன்றத்தில் எதிர் மனுக்கள் தாக்கலாயின.
2007ல் இட ஒதுக்கீடுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, ஒரு வழியாக தற்போது 27 சதவிகித ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதே.
அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் வாரிசுகளுக்கு இதன்படி இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் சரிதான்.
அதே சமயம், பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று சொல்லியிருப்பது சில விவாதங்களை உருவாக்கியிருக்கிறது. சில கட்சிகள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றன. தமிழக முதல்வரும் கிரீமி லேயர் முறை கூடாது என்பதை வலியுறுத்தியிருக்கிறார்.
இந்தப் பிரச்னை குறித்துக் கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார் மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங். தகுதி வாய்ந்த மாணவர்களுக்குச் சலுகை மறுக்கப்படாத அளவுக்குப் பிரச்னை கையாளப்படும் என்று உத்தரவாதம் அளித்திருப்பதைப் பாராட்டலாம். வரும் ஆண்டிலேயே இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முனைந்ததற்காகப் பெருமிதம் கொள்ளலாம்.
முதலில் தடை கடந்து வந்த இட ஒதுக்கீட்டைச் செயல் படுத்துவோம்; பிறகு அதில் உள்ள சிக்கல்கள் குறித்துப் பரிசீலிப்போம்.. |