|
'வாழ்ந்தவர் கோடி.... மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிறைந்தவர் (நின்றவர்) யார்?’ என்று கவியரசு கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலில் எழுதியுள்ளார். இதே பாடலில்தான் தாயகம் காப்பது நமது கடமையடா! என்றும் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை காந்திஜி பிறந்த அக்டோபர் 2ஆம் தேதி உலக வன்முறை எதிர்ப்பு தினமாக ஆண்டு தோறும் பின்பற்றி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு முதல் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினத்தை நெல்சன் மண்டேலா தினமாக பின்பற்ற ஆரம்பித்துள்ளது.
அகிம்சை வழியைக் கடைப்பிடித்த காந்திஜியின் வழியைப் பின்பற்றியே 25 ஆண்டுகள் தனிமைச் சிறையில் இருந்தவர் மண்டேலா. ஆப்பிரிக்கக் கறுப்பர்களின் விடுதலைக்கு இதன் மூலம் வழி வகுத்தார். இதனால்தான் உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்தரத்திற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவர்கள் நெல்சன் மண்டேலாபோல அகிம்சை வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான், இவரின் பிறந்த தினத்தை நெல்சன் மண்டேலா தினமாக ஐக்கிய நாடுகள் சபை கொண்டாட ஆரம்பித்துள்ளது.
காந்திஜி, மண்டேலாபோல நம் வாழ்க்கையும் ஒரு செய்தியாக இருக்க வேண்டும்! இதற்காக இவர்கள் பின்பற்றிய அகிம்சை, நேர்மை போன்றவற்றை நம் சொந்த வாழ்வில் பின்பற்ற வேண்டும். நாம் பிரபலம் இல்லாத மனிதர்களாக இருப்பதைவிட நல்ல மனிதர்களாக வாழ்வதுதான் நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் நம் நண்பர்களுக்கும் நாம் கொடுக்கும் செய்தி.
நரேஷ் குப்தா ஓய்வு பெற்றபோது பலரும் வருத்தப்பட்டனர். பத்திரிகைகள் ‘இந்தக் காலத்திலும் எளிமையையும் நேர்மையையும் பின்பற்றி ஒருவர் அரசுப் பதவியில் வெற்றிகரமாக நம் கடமையைச் செய்ய முடியும் என்று நிரூபித்தவர்’ என்று கட்டம் கட்டி செய்திகள் வெளியிட்டு இவரைப் பெருமைப்படுத்தின.
ஒருவர் ஓவியராக, எழுத்தாளராக, கண்டுபிடிப்பாளராக உயர்வதே எனது இலட்சியம் என்றால், உடனே நீ மைக்கேலஞ்சலோ, பிக்காஸோ, போல புகழ்பெற்ற ஓவியர்களுள் ஒருவராகவோ, இயான் ஃப்ளெமிங், சிட்னி ஷெல்டன் போன்ற எழுத்தாளர்களுள் ஒருவராகவோ, எடிசன், ஹென்றிபோர்டு போல ஒரு கண்டுபிடிப்பாளராகவோ உயர முடியாது’ என்று ஊக்கத்தைத் குறைக்கும் விதத்தில் பேசுபவர்களே அதிகம்.
நாம் நமக்கு விருப்பமான துறையில்தான் சாதிக்க முடியும். உண்மை இப்படி இருக்க, உடனே இதற்கு முன்பு சாதித்தவர்களுடன் ஒப்பிட்டு நமது ஊக்கத்தைக் கெடுக்கலாமா? இதுபோன்ற சிந்தனைகள் மற்றவர்களிடமிருந்து வந்தாலும் நாம் நமது மனதில் இதுபோன்ற எதிர்மறை சிந்தனைகள் நுழைந்து விடாமல் உற்சாகமாக வாழ வேண்டும். காந்திஜி, காமராஜர் போன்றவர்கள் என் தலைவர்கள் என்று கூறுமளவிற்கு மனத்தூய்மையுடன் நெஞ்சில் வன்முறை இன்றி நேர்மையுடன் நம் வாழ்வை நடத்த வேண்டும்.
இப்படி வாழ ஆரம்பித்தால் நம்மைச் சுற்றி இருக்கும் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் நமக்குப் பிடித்தமான வழிகளிலேயே ஆர்வத்துடன் வாழத் தங்களையும் பழக்கப்படுத்திக் கொள்வார்கள்.
‘தொடர்ந்து கற்றுக் கொண்டு நிறையச் சாதித்து இப்படி ஒருவன் வாழ்ந்தான் என்று என் பெயரை விட்டுச் செல்ல வேண்டும். வாழ்நாள் முழுவதும் அடக்கத்துடன் இவன் வாழ்ந்தான்’ என்று கூற வேண்டும் என்கிறார் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்.
ஏற்கெனவே ரத்தன்டாடாவின் அடக்கத்தைப் பார்த்து வியந்த ரஜினி ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று கூறி அடக்கத்துடன் வாழும் ஏ.ஆர்.ரஹ்மானைப் பார்த்து வியக்கிறேன் என்கிறார்.
இந்தக் காலத்திலும் தூய்மை, நேர்மை, திறமை போன்றவற்றைப் பின்பற்றி அடக்கத்துடன் வாழ்ந்த வெற்றியாளர்களுள் ஒருவராக நமது பெயரும் இடம் பெறும் விதத்தில் நம் வாழ்க்கையையும் ஒழுங்குபடுத்திக் கொண்டு கட்டுப்பாடுடன் வாழ்வோம். வெற்றியும் மகிழ்ச்சியும் இதன் மூலம் உறுதியாக நமக்கும் கிடைக்கும்.
கானோபஸ் |