Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61 Kumudam.com, Kumudam Kalkandu - தெரிஞ்சுக்குங்க
ஹெலிகாப்டர் என்பது எத்திசையில் வேண்டுமானாலும் பறக்கக் கூடியது. அது செங்குத்தாக உயரே ஏறும். நேராகக் கீழே இறங்கும். முன்புறமாகவோ பின்புறமாகவோ பக்கவாட்டமாகவோ செல்லக்கூடியது. அந்தரத்தில் ஓர் இடத்தில் மிதந்து நிற்கும். தரைமட்டத்தின் மீதோ நீர்மட்டத்தின் மீதோ சில அங்குல உயரத்திலேயே அதனால் பறக்க முடியும்! அது மணிக்கு 100 மைல் வேகத்திலே பறக்கக்கூடியது. வானில் ஆயிரக்கணக்கான அடி உயரமும் ஏறக்கூடியது.
லேயனார்டோ டாவிஞ்சி என்பவர் 15ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் ஹெலிகாப்டரை உருவாக்கத் திட்டமிட்டார். ஆனால் 18ஆம் நூற்றாண்டு வரை அவர் வரைந்த படங்களும் கூறிய கருத்துக்களும் மறைந்து போய்விட்டன. ஹெலிகாப்டரின் வரலாற்றில் எல்லோருக்கும் மேலாகச் சிறப்புற்றிருப்பவர் ஐசர் ஸிக்கார்ஸ்க்கி என்னும் ரஷ்யர் ஆவார். 1920இல் மாதிரி ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்கினார். ஆனால் அவர் அமெரிக்காவில் வாழத் தொடங்கியபின் அங்கேதான் 1940இல் முதலாவது ஹெலிகாப்டரை உருவாக்கி முடித்தார்.
சூப்பர்ஸானிக் விமானம்!
ஒலியின் வேகத்தைவிட வேகமாகப் பறக்கக்கூடிய விமானத்துக்கு சூப்பர் ஸானிக் விமானம் என்று பெயர். ‘சூப்பர் ஸானிக்’ என்னும் சொல் ஒலியை விட விரைவான வேகத்தைக் குறிக்கும். சாதாரண வெப்ப நிலைகளிலும் அழுத்தத்திலும் ஒலியின் நேர் வேகம் மணிக்கு சுமார் 750 மைல்கள். அதாவது செகண்டுக்கு 1120 அடி. ஒரு விமானம் மணிக்கு 1520 மைல் வேகத்தில் பறந்தால் அது ஒலியின் வேகத்துக்கு இருமடங்கான வேகத்தில் பறப்பதாக ஆகும். அப்போது நாம் அந்த விமானம் ஒலியினும் மேலான, அதற்கு இருமடங்கான வேகத்தில் பறக்கிறது என்று கூறுவோம். ஆனால் ஒலியினும் மேலான வேகத்தை அடைவதற்கு முன் அந்த விமானம் ஒலியின் தடையரணைக் கடந்தாகவேண்டும். ஒலியினும் மிகுந்த வேகத்தில் பறப்பதில் உள்ள சிக்கல்களும் அதன் ஊடாக அபாயம் இன்றிப் பறப்பதும் ஒன்று.
ஒலியினும் மிகுந்த வேகத்தில் பறப்பதைப் பற்றிய செய்திகளில் பெரும்பாலும் ஒலியினும் மிகுந்த வேகத்தில் பாய்ந்தோடும் காற்றோட்டத்தில் மாதிரி விமானங்களை வைத்து அவற்றிற்கு நிகழ்வதை ஆராய்வது பற்றியதாகும். அவ்வளவு வேகமாகப் பாய்ந்தோடும் காற்றோட்டத்தை இயற்றும் ஏற்பாட்டுக்குக் காற்றுக் குடை வழி என்று பெயர். காற்றுக்குடை வழிச் சோதனைகளின் மூலமாக பயனுள்ள எத்தனையோ விவரங்கள் தெரியவந்துள்ளன. ஒலியினும் மிகுந்த வேகத்தில் செல்லும் விமானங்களை உரு வாக்கும் என்ஜினியர்களுக்கு எழும் எத்தனையோ பிரச்னைகளைத் தீர்க்க அவை துணை புரிந்துள்ளன. இவை மிகவும் நன்றாகச் செயல்படும் பொருட்டு இந்த விமானங்களின் சிறகுகள் பின்புறமாகச் சாய்த்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் முகப்பு கூர்மையாக அமைந்துள்ளது.
அமெரிக்கர்கள் சோதனைக்காக உருவாக்கிய எக்ஸ்-1 என்றும் ராக்கெட்டே 1947இல் முதன்முதலாக ஒலியின் தடை அரணைத் தகர்த்துச் சென்றது. அதற்குப்பின்னர் மிகு ந்த வேகத்தோடும், மிகுந்த உயரத்திலும் பறக்கக்கூடிய ஒலியினும் மிகுந்த வேகத்தில் செல்லும் விமானங்களைக் கட்டும் துறை மிக விரைவாக முன்னேறியுள்ளது. எக்ஸ்-15 என்னும் மற்றொரு சோதனை ராக்கெட் விமானம் 1961இல் 4070 மைல் வேகத்தில் பறந்தது. அந்த வேகம் வேறு எதுவும் எட்டாத உச்ச வேகம் ஆகும். இன்று விண் வெளியின் வாயிற்படியில் நிற்கும் மனிதனுக்கு, முதன்முதலாக மனிதன் விமானத்தில் ஏறிப் பறக்கத் தொடங்கி இப்பொழுது எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன என்று நினைத்துப் பார்க்கும்போது விந்தையாகவே தோன்றுகிறது அல்லவா?
சில சாதனைக் குறிப்புகள்:
லூயி பிலேரியா என்னும் ஃப்ரெஞ்சு விமானி முதன்முதலில் இங்கிலீஷ் கால்வாயைக் கடந்து பறந்தார்! 1909ஆம் ஆண்டில்.
1913இல் ரஷ்யாவில் ஐகர் ஸிக்கார்ஸ்க்கி என்பவர் உலகிலுள்ள விமானங்களில் எல்லாவற்றையும் விட மிகப் பெரிதான ஒன்றை உருவாக்கினார். க்ரான்ட் என்று அதற்குப் பெயர் சூட்டினார். அதில் 4 என்ஜின்கள் இருந்தன!
1919இல் காப்டன் ஜான் ஆல்காக்கு, லெப்டினென்ட் ஆர்தர் பிரௌன் என்ற இருவரும் இடையில் ஓர் இடத்திலும் தங்காமல்! அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தார்கள்! இவர்கள் நவயுக ஹனுமான்களோ! என்று வியப்பு ஏற்படுகிறதல்லவா?
1924இல் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் முதன்முறையாக உலகைச் சுற்றி பயணம் செய்தனர்!
1926இல் ரிச்சர்ட் ஈ பேர்ட், ப்லாயிட், பென்னெட் ஆகியவர்கள் வடதுருவத்திற்கு மேலே முதன்முதலாகப் பறந்தார்கள். பேர்ட் 1929இல் தென் துருவத்துக்கு மேலேயும் பறந்தபோது இரண்டு துருவங்களின்மீதும் முதன்முதலாக வெற்றிகொண்டவர் அவரே. புராணத்தில் துருவனின் ஒப்பிலா பக்தியை மெச்சி அவருக்கு நட்சத்திரப் பதவி அளிக்கப்பட்டது. இரண்டு துருவங்களின்மீதும் பறந்து சாதனை புரிந்த பேர்ட்டுக்கும் இது போன்று நட்சத்திரப்பதவி கிடைக்குமாயின் அவரை நவயுக துருவன் என் றழைக்கும் உரிமையை நமக்கு நாமே எடுத்துக்கொள்ளலாமே!
1927இல் சார்லஸ் வின்ட்பெர்க் தன்னந்தனியாக ஓரிடத்திலும் தங்காமல் அட்லாண்டிக் கடலைக் கடந்ததால் வரலாற்றுத் துறையில் புகழ் பெற்றார். நியூயார்க்கிற்கும் பாரீஸ் நகருக்கும் இடையே உள்ள 3600 மைல்களை 33 மணி 31 நிமிடங்களில் அவர் கடந்திருந்தார்!
1928இல் முதன்முதலில் விமானத்தில் அட்லாண்டிக் கடலைக் கடந்த பெண், அமீலியா எர்ஹார்ட் என்பவர், 1932இல் அவர் இரண்டாவது முறை தனியாகப் பறந்தார். 1937இல் உலகைச் சுற்றி அந்தப் பெண்மணி விமானப் பயணம் செய்துகொண்டு இருக்கையில் காலமானார்.
பேராசிரியர் பிக்கர்டும் அவருடைய துணைவரும் பலூனில் ஏறி வானில் பத்து மைல் உயரம் சென்றனர்!
புதிய கண்டுபிடிப்புகளையும் திட்டங்களையும் யார் செய்தாலும் சொன்னாலும் பொதுமக்களும் சரி, அரசும் சரி, நம்ப மறுப்பார்கள். ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மேலும் ஏ ளனமாகப் பேசி நகைப்பார்கள். இது உலக இயல்பு. அமெரிக்காவில் 1903ஆம் ஆண்டு கிட்டிஹாக் என்னும் இடத்தில் ரைட் சகோதரர்கள் முதன்முதலாக ஒரு விமான த்தைப் பறக்கச்செய்து காட்டினார்கள். அவர்களுக்கு முன் பலர் முயன்றபோதிலும் முழுமையாக விமானத்தை வானவெளியில் பறக்கச் செய்தவர்கள் ரைட் சகோதரர்களே!
- எஸ்.லீலா
சொந்த ஊரில் வரவேற்பு இல்லை!
ரைட் சகோதரர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி வந்தபோது எவருமே அவர்களை வரவேற்கவும் இல்லை. பாராட்டவும் இல்லை. ‘ஏதோ பலமாக காற்று அடித்ததனால் விமானம் மேலே எழும்பிப் பறந்திருக்கும்’ என்று மக்கள் கருதினர். மேலும் ‘விமானமாவது, பறக்கிறதாவது?’ என்று அவர்கள் ஏளனமாகப் பேசிக்கொண்டார்கள். ரைட் சகோதரர்களும் தாங்கள் விமானத்தில் பறந்ததைப் பெருமையாக தங்கள் நண்பர்களிடம் கூடச் சொல்லவில்லை! ஏனெனில், அவர்கள் நம்புவார்களோ மாட்டார்களோ என்ற பயமே காரணம். டேட்டனிலிருந்து வெளிவந்த பத்திரிகைகூட இந்தச் செய்தியை வெளியிடவில்லை. சில பத்திரிகைகளில் சிறிதாக ஒரு மூலையில் செய்தி கு றிப்பிடப்பட்டிருந்தது. அதைப் படித்தவர்களில் பெரும்பாலான வாசகர்கள் அந்தச் செய்தியை நம்பவில்லை அதைவிடக் கடினமாக, ஒரு வாகனம் வானில் பறக்கவே முடியாது என்று சில விஞ்ஞானிகள் அப்போது அடித்துக்கூறினர். கேவலம் சைக்கிள்களை செப்பனிடும் தொழிலாளிகள் இரண்டு பேர் நிகழ்த்தவே முடியாத ஒரு சாதனையைச் செய்து காட்டியிருக்கிறார்கள் என்பதை எந்த பத்திரிகை ஆசிரியரும் ஒப்புக்கொள்ள முன் வரவில்லை.
ரைட் சகோதரர்கள் 1904இல் டேட்டன் கிராமத்திற்கு அருகிலிருந்த ஒரு திடலில் தங்கள் விமானத்தை ஓட்டிச் சோதித்துக்கொண்டிருந்தார்கள் அப்போது, பள்ளிச் சிறுவர்கள் சிலர் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்... ஊருக்குள் கசமுசா என்று செய்தி பரவியது. அப்போதுகூட பத்திரிகை நிருபர்களும் ஆசிரியர்களும் அதை நம்பவில்லை! முதன்முதலாக விமானம் பறந்தது பிரமிப்பு ஊட்டியதா? இல்லை என்பது உண்மையே.
தரையிலிருந்து பத்து பதினைந்து அடி உயரத்தில் 200, 300 அடி தொலைவே அது பறந்தது. 1904, 1905ஆம் ஆண்டுகளில் அவர்கள் விமானத்தை ஓட்டிச் செல்வதில் தான் முனைந்து இருந்தனர். 1905இல் ஆர்லில் ரைட் கிட்டத்தட்ட 20 மைல் தொலைவுக்கும் இரண்டு நாள் கழித்து வில்பர் ரைட் 24 மைல் தொலைவுக்கும் விமானத்தை ஓட்டிச் சென்றனர். இருப்பினும் அந்த நிகழ்ச்சியைப் பற்றி யாரும் அக்கறை காட்டாதது வியப்பாகவே இருந்தது.
பள்ளிச் சிறுவர்கள் விமானம் பறந்ததைப் பற்றிப் பேசிக்கொண்டதைக் கேட்ட பத்திரிகை ஆசிரியர் ஒருவர், ஆர்வில் ரைட்டை தற்செயலாகப் பார்த்து ‘‘நீங்கள் விமானத்தில் பறக்கிறீர்களாமே?’’ என்று அலட்சியமாகக் கேட்டார். ‘‘ஆமாம், அடிக்கடி பறக்கிறோம்’’ என்று சாதாரணமாகச் சொன்னார் ஆர்வில். ஆசிரியருக்குச் சப்பென்று ஆகிவிட் டது. ‘‘சரி ஏதாவது முக்கியமாக நடந்தால் எனக்குச் சொல்லுங்கள்’’ என்று கூறிவிட்டுப் போய்விட்டார் அவர்.
ரைட் சகோதரர்கள் திடலில் தினமும் பறப்பதை நூற்றுக்கணக்கான மக்கள் பார்த்தார்கள் என்பது உண்மையே. ஆனாலும் காற்றைவிடக் கனமான ஒரு விமானம் சுயமுயற்சியில் எழும்பிப் பறக்கவே முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்த விஞ்ஞானிகளும் பத்திரிகை ஆசிரியர்களும் பொதுமக்களும் அந்தச் செய்தியை நம்பவே இல்லை. அமெரிக்க ராணுவத்துறை கூட அதை அலட்சியப்படுத்தியதுதான் ஆச்சரியம்!
சட்டத்தில் இடமில்லை!
ரைட் சகோதரர்கள் விமானக் கட்டுமான உரிமைகளை அரசுக்கு விட்டுக்கொடுப்பதாக அரசுக்குப் பல கடிதங்கள் எழுதினார்கள். பறக்கும் இயந்திரங்களை உருவாக்கு வதற்கு பண உதவி செய்ய சட்டத்தில் இடமில்லை என்று அவர்கள் பதில் எழுதினார்கள். இதில் வேடிக்கை என்ன என்றால் ரைட் சகோதரர்கள் எழுதிய கடிதங்களில் பண உதவியே கேட்கவில்லை! 1905ல் ராணுவத் துறையானது ஆளை ஏற்றிக்கொண்டு பறக்கக்கூடிய ஒரு விமானத்தை உருவாக்கி அதைப் பறக்கவிட்டுக் காட்டினால்தான் உங்கள் கடிதத்தின் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஒரு கடிதம் எழுதியது. இதற்கு முன்னதாகவே, 1903 டிசம்பர் மாதத்திலேயே ரைட் சகோதரர்கள் விமானத் தில் பறந்து கொண்டிருந்தார்கள் என்பதை அரசு தெரிவித்துக்கொள்ளவில்லை!
அந்நிய நாட்டின் அரவணைப்பு!
ரைட் சகோதரர்களின் கண்டுபிடிப்பைப் பற்றி ஃப்ரெஞ்சு அரசு அக்கறை காட்டத் தொடங்கியது. அதைப் பற்றிய செய்தியைப் படித்து ஒருவர் விமான ரகசியங்களை முதலில் அமெரிக்கா அரசுக்கு விற்க ஏன் முயற்சி செய்யவில்லை? என்று கோபமாகக் கடிதம் எழுதினார். நாங்கள் அதைச் செய்யத்தான் முயன்று கொண்டிருக்கிறோம் என்று பதில் எழுதினார்கள். இந்தக் கடிதத் தொடர்பை அமெரிக்க செனட் உறுப்பினர் பார்த்துவிட்டு ராணுவ அமைச்சருக்குத் தெரிவித்தார். அவர், ஆயுத உற்பத்தித் து றைக்கு அந்தச் செய்தியை அனுப்பினார். அவர்கள் நம்பிக்கை இல்லாமல் அதை குப்பைக் கூடையில் போட்டுவிட்டனர்.