Warning: Cannot modify header information - headers already sent by (output started at D:\WebSpace\kumudam.com\www\usercheck.php:33) in D:\WebSpace\kumudam.com\www\auth.php on line 61 Kumudam.com, Kumudam Health - பிரபலம் ஆஸ்பிட்டல் அனுபவங்கள்
ஆன்மிகத்தின் பக்கத்தில் இருந்து கொண்டே அரசியல் அரங்கில் அவ்வப்போது பரபரப்பைக் கிளப்புபவர் இவர். இந்துக்களுக்கோ, கோயில்களுக்கோ எந்தப் பிரச்னையென்றாலும் நேரம் காலம் பார்க்காமல் களத்தில் குதித்து போராடுபவர். தமிழக இந்துத்துவ அமைப்புகளிடம் தனிப்பெரும் செல்வாக்கோடு வலம் வரும் இந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் ராம.கோபாலனிடம் ஆஸ்பிட்டல் அனுபவங்கள் பற்றிக் கேட்டோம்.
“ சாதாரணமாக நான் ஆஸ்பத்திரிகளுக்குப் போய் தங்குவதை விரும்புதில்லை. ஆனாலும், எனக்கும் சில சம்பவங்கள் நேர்ந்துள்ளன. குறிப்பாக, 1984ல் என்னைச் சிலர் வெட்டிச் சாய்க்க முயன்றார்கள். அதில், தப்பித்த என்னை சகாக்கள் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையான ராஜாஜியில் சேர்த்து முதலுதவி செய்தார்கள். அங்கிருந்த சில காலம் வரை எனக்கு முகம் சுழிக்க வைக்கும் சம்பவம் எதுவுமே நடக்கவில்லை. அரசு மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை சிறப்பான கவனிப்பையே தந்தார்கள்.
ஆனால், அந்தப் பொது மருத்துவமனைக்கு வந்த பார்வையாளர்கள் சிலர்தான் ஆங்காங்கே அசுத்தத்தை ஏற்படுத்தினார்கள். அதை அந்த மக்கள்தான் குறைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, அலுவலர்களைக் குறை சொல்லிப் பயனில்லை என்பதைக் கண்கூடாகப் புரிந்து கொண்டேன். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். அது டி.டி.கே தயவில் நடந்த ஒரு ஹெல்த் சென்டர். அங்கே பாத்ரூம் உள்ளிட்ட அனைத்து இடங்களும் மிகச் சத்தமாகப் பராமரிக்கப்பட்டதை இன்றுவரை பாராட்டத் தோன்றுகிறது.
அத்துடன், அங்கு எனக்கு வைத்தியம் செய்த டாக்டர்கள் முதல் நர்சுகள் வரை அறிவோடும்,உண்மையான பற்றோடும் சிகிச்சையளித்ததை இன்றும் நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறேன். மூன்றாவதாக முதுகுவலி ஏற்பட்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் ஆனபோது ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லலாம். இப்போது கலைஞருக்கு ஆப்ரேஷன் செய்த டாக்டர்.மார்த்தாண்டம்தான் எனக்கும் சிகிச்சையளித்தார்கள். பிரமாதமான கவனிப்பு. ஒட்டுமொத்த தொழில்நுட்பமும் ஒரே கூரையின்கீழ் இருப்பதைப் பார்த்தேன். செலவு கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், உடலைக் குணப்படுத்துவதற்கான அத்தனை வசதிகளும் ஒரே இடத்தில் குவிந்திருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
இதெல்லாம் போக,அரசு ஆஸ்பத்திரிக்கும் அவ்வப்போது சில சகாக்களைப் பார்க்கப் போவதுண்டு. அப்போதெல்லாம் நான் முகம் சுளிக்கும் எந்தச் சம்பவத்தையும் பார்த்ததில்லை. அதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் நடக்கும் என்று நினைக்கிறேன். இந்த இடத்தில், குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் நல்லதையே நினைத்துக் கொண்டு போனால், நல்லதே நடக்கும் என்பார்கள். அதுபோல, நமக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களை தெய்வமாக நினைத்தால் நாம் மறுபடியும் மனிதர்களாக நடமாடலாம். இதற்கு மேல் வேறென்ன சொல்ல?’’ என்றபடி முடித்துக் கொண்டார் இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன்.