|
இறைவனுக்கு வணக்கம். இதய பாரதத் தாய்க்கு வணக்கம். இன்பத் தமிழ்ச் சோலைக்கு வணக்கம். இனிய தமிழ் பக்தர்களுக்கு வணக்கம்.
‘‘எனக்கு நிம்மதியே இல்லை’’ என்று கடவுளிடம் கேட்டேன் நான்.
‘‘ஏன் என்ன பிரச்னை?’’
‘‘பிரச்னை எதுவும் இல்லைதான். ஆனாலும் என்னவோ தெரியவில்லை.
படபடப்பாகவும்,எதிலும் சந்தேகமாகவும் இருக்கிறது.என்னை எல்லோரும் ஏமாற்றுகிறார்களோ என்ற ஐயமும் எப்போதும் ஏற்படுகிறது.’’
கடவுள் புன்னகைத்தார்.என் கையில் கொஞ்சம் தங்க நாணயங்களை வைத்தார்.
‘‘இறைவா, எனக்கு எதற்குத் தங்கம்? இதை வைத்திருந்தால் நிம்மதி கிடைத்துவிடுமா?’’ என்றேன்.
கடவுள் சொன்னார். ‘‘முதலில் எண்ணிப் பார்.’’
நான் எண்ணினேன். ஒன்பது நாணயங்கள் இருந்தன.
‘‘தம்பி, இந்தத் தங்கக் காசுகள் உனக்கு இல்லை. நீ என்ன செய்கிறாய், இந்த 9காசுகளையும் கொண்டு போய் இன்று ராத்திரி உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போட்டுவிடு.’’ என்றார் கடவுள்.
நான் ஒன்றும் புரியாமல் அது போலவே செய்தேன்.என்ன நடக்கப் போகிறது என்பதை மறைந்து நின்று பார்த்தேன்.
பொழுது விடிந்தது. பக்கத்துவீட்டுக்காரன் வெளியில் வந்தான். தங்கக் காசுகளைப் பார்த்ததும் பொறுக்கினான். 1,2,3, ... ... 9.
மீண்டும் தேட ஆரம்பித்தான். ஆம். பத்தாவது நாணயம் எங்கே என்று தேட ஆரம்பித்தான். மறுநாளும் தேடினான். யாராவது எடுத்திருப்பார்களோ என்று பக்கத்துவீடு,எதிர் வீட்டுக்காரர்களை எல்லாம் சந்தேகமாகப் பார்த்தான்.
நிம்மதியில்லாமல் அலைந்தான்.தினம் தினம் காலையில் வந்து காசு ஏதாவது கிடக்கிறதா என்று தேடிப் பார்த்தான்.இல்லை என்று தெரிந்தவுடன் வீட்டில் உள்ளவர்களிடம் எல்லாம் எரிந்து விழுந்தான். படபடப்பாக இருந்தான். தன்னை யாரோ ஏமாற்றுவதாக நினைத்தான்.
கடவுள் மறுநாள் என் முன் தோன்றினார்.
‘‘என்ன ஆச்சு பார்த்தாயா?’’ என்றார்.
நான் ஒன்றும் புரியாமல் கடவுளையே பார்த்தேன்.
‘‘நான் தந்தது 9 நாணயங்கள்தான். அது அவனுக்கு இலவசமாகக் கிடைத்தது.ஆனால் பத்தாவது நாணயம் இருக்கும் என்று அவன் நினைத்தது ஏன்?அதை யாராவது எடுத்திருப்பார்களோ என்று சந்தேகப்பட்டது ஏன்?தினமும் வேறு நாணயம் கிடைக்குமா என்று பார்த்தது ஏன்?அப்படிக் கிடைக்காததால் மற்றவர்களிடம் எரிந்து விழுந்தது ஏன்?
உனக்குப் புரிகிறதா தம்பி? எல்லாக் குழப்பங்களுக்கும் காரணம் உங்களது ஆசைதான்.. பேராசைதான். அப்படி இல்லாமல் இயல்பாக, எது நடந்தாலும் அதைப் பரிபூரணமாக,சந்தோஷமாக எல்லாம் என்னுடைய விருப்பம் என்று நினைத்து வாழ்ந்து பார். எத்தனை சந்தோஷமாக, திருப்தியாக இருப்பாய் என்பதை உணர்வாய்’’சொல்லிவிட்டுக் கடவுள் மறைந்து போனார்.
ப்ரியமுடன், ஆசிரியர் |