|
இறைவனுக்கு வணக்கம்.
இதய பாரதத் தாய்க்கு வணக்கம்.
இன்பத் தமிழ்ச் சோலைக்கு வணக்கம்.
இனிய தமிழ் பக்தர்களுக்கு வணக்கம்.
சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்த அந்தச் செய்தி உண்மையாக இருந்துவிடக்கூடாது என்ற பதைபதைப்புடன்தான் ஆரம்பிக்கிறேன்.
ஒரு பெருமாள் கோயிலில், பக்தர்கள் ஆண்டாளின் திருப்பாவையைப் பாடிக் கொண்டு சென்றபோது, ‘ஆலயத்திற்குள் தமிழ்ப் பாசுரமெல்லாம் பாடாதீர்கள். புனிதம் கெட்டுவிடும்’ என்று தடுக்கப்பட்டதாக வந்த செய்திதான் அது.
தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயிலுக்குள், தமிழ்ப்பெண் ஆண்டாள், அதுவும் இறைவனையே காதலித்து மணந்த பக்தை எழுதிய பாசுரத்தைப் பாடக்கூடாது என்று தடுப்பதுதானே பாவம்? அப்படித் தடுத்தால்தானே கோயிலின் புனிதம் கெட்டுவிடும்?
அதுவும் ஆண்டாளின் பாடல்களைப் பாடினால் பாமரனுக்கும் பக்தி வருமே? அந்தத் தீந்தமிழ் இலக்கியத்தைப் போய்ப் பாடக்கூடாது என்று சொல்ல எப்படித்தான் மனசு வந்தது? அந்த அருமையான பாடலைக் கேட்க பகவான் எத்தனை ஆவலாகக் காத்துக் கொண்டிருப்பார்? அதைப் போய் தடுத்திருக்கிறார்களே என்று நினைத்து, மனம் முழுவதும் பாரமாக இருக்கிறது.
அந்தச் செயல் ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்று தமிழால் இறைவனைப் புகழ்ந்த ஆசார்யார்களையே அவமதிப்பதுபோல் எனக்குத் தோன்றுகிறது.
இறைவன் எல்லாம் தெரிந்தவர். எல்லோரையும் காப்பவர். அவரைப் போய் இந்த மொழியால்தான் பாடவேண்டும், வணங்க வேண்டும் என்று குறுகிய கண்ணோட்டத்தில் அடைப்பது வருத்தத்துக்குரியது. அவரவர்க்கு எந்த மொழி தெரியுமோ, பிடிக்குமோ அதிலேதான் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிரார்த்தனை செய்ய முடியும்.
வடநாட்டில், காசி, ரிஷிகேஷில், ஏன் திருப்பதியில் கூட தமிழ் பாடப்படும்போது, தமிழ்நாட்டில் தமிழை அனுமதிக்காமல் இருப்பது, கடவுளை மட்டுமல்ல தாய்மொழியான தமிழையே அவமதிப்பதாகும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ப்ரியமுடன்
 ஆசிரியர் |