|
தமிழகத்தின் தலைசிறந்த 'எஸ்கேப் பேர்வழி'நம்ப சித்தன். காணாமல் போய் நீண்ட நாட்கள் ஓடிவிட்டது.
நாட்டில் எவ்வளவோ அக்கிரமம் நடந்து வருகிறது.அது பற்றியெல்லாம் பேச வேண்டிய மனுஷன் இப்படி விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் மாதிரி மௌன சாமியார்களாக மாறிப்போனால் என்ன சொல்வது என்று நொந்தபடியே தகவல் அனுப்பினார் சுவருமுட்டி சுந்தரம். அந்த கவலையைப் போக்கும் விதமாக சித்தனை வலைபோட்டு இழுத்து வந்தார் அன்வர் பாய். ஊழலில் சிக்கிய அரசியல்வாதி போன்று சும்மா கம்பீரமாக நின்றிருந்தார் சித்தன். இப்போவெல்லாம் எந்த ஊழல் அரசியல்வாதி பயப்படுகிறார்...
"என்னையா சித்தா, உனக்கும் கொடநாடு எஸ்டேட் நினைப்பு வந்துச்சோ. அடிக்கடி காணாம போயிடுறே.." என்ற சுவருமுட்டி, ''இன்னைய தேதிக்கு திமுக-வை ஒரு சின்ன சி.டி. மிரட்டிகிட்டு இருக்குன்னு சொன்னா நம்புவீங்களா?" என்றார்.
"என்னது...ஊருல இருக்கிற எல்லா கட்சியையும், இயக்கத்தையும் கருணாநிதிதான் மிரட்டுவார். அவருக்கே மிரட்டலா? இதுதான் திருப்பதிக்கே லட்டுன்னு சொல்றதா..." என்று கோட்டை கோபாலு சிரிக்க "நீ கொஞ்சம் வாயை மூடுவியா. விட்டா ஒரேடியா சிரிப்பியே" என்று குறுக்கிட்ட சுவருமுட்டி ''டெல்லி வரைக்கும் போயிருக்கு அந்த சிடி. அதனாலதான் கலைஞர் ரொம்ப கலங்கியிருக்கார்" என்று புதிர் போட, அவசர குடுக்கை அன்வர்பாய் "என்னான்னு விவரமா சொல்லித் தொலைக்க கூடாதா" என்றார்.
"இப்படி அவசரப்படக் கூடாதுப்பா. எதுக்கும் நிதானம் வேண்டும். போனவாரம் தூத்துத்குடியில் ஒரு திமுக பொதுக் கூட்டம். 'அம்மா' பக்கம் மந்திரி பதவி அனுபவிச்சுட்டு இப்போ திமுக பக்கம் தாவின அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்த கூட்டம்.அதுல மத்திய அமைச்சர் அழகிரியும் நடுநாயகமா கலந்துகிட்டார். அந்த கூட்டத்துல பேசின முக்கிய பேச்சாளர் வாகை முத்தழகன் என்பவர் கொஞ்சம் 'ஓவர்' ஆயிட்டார் போல. சமீபமா பார்த்தா நம்ப காங்கிரஸ் கட்சி இளங்கோவன் அண்ணாச்சி அப்பப்போ திமுக-வையும், கலைஞரையும் போட்டு தாக்கி பேசிகிட்டு வர்றாரு.அதுக்கு பதிலடின்னு நினைச்சு அந்த திமுக பேச்சாளர் ராஜீவ்காந்தியையும், ராகுல்காந்தியையும் சும்மா பிச்சு உதறிட்டாரு.கொஞ்சம் மோசம்தான்னு கேட்டவங்க சொல்றாய்ங்க.கூடவே நம்ப இளங்கோவன் அண்ணாச்சிக்கும் செம டோஸ், குண்டக்க மண்டக்க விழுந்திருக்கு. அந்தப் பேச்சைக் கேட்ட காங்கிரஸ்காரன் யாரும் சத்தியமா திமுக-கூட உறவே வேணாம்னு ஓடிடுவான். அம்புட்டு நாசகாரமான பேச்சு. கொதிச்சுப் போன உள்ளூர் காங்கிரஸ் ஆளுங்க படாதபாடு பட்டு அந்த சி.டி.யை வாங்கி இளங்கோவன்கிட்ட போட்டு காட்டியிருக்காங்க.
வைக்குறேன்டி ஆப்புன்னு அப்படியே டெல்லிக்கு அனுப்பினாரு இளங்கோவன்.அங்கிருந்து 'அவசரப்பட வேண்டாம். இந்த சிடியை வெளியில் விட வேண்டாம்' என்ற தகவல் வந்திருக்கு. அதோட மத்திய உளவு பிரிவு போலீஸ் மூலமா 'உறுதிப்படுத்தி சொல்லுங்கன்னும்' கேட்டிருக்கு. ஏற்கனவே மத்திய உளவு போலீஸ் அதுபற்றின தகவலை பக்காவாக வைத்திருந்ததை டெல்லிக்கு அனுப்பினதாம்.. இதுக்கு மத்தியில் நம்ப தமிழ்நாடு உளவு போலீசும் அந்த பேச்சு தகவலை கலைஞர் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கு. சரி இளங்கோவன் பேசினதுக்கு வாகை முத்தழகன் பேசினது சரியாப்போச்சுன்னு ஆசுவாசப்படுத்திகிட்டு இருந்துட்டாரு போல.
இதுதான் சரியான நேரம்னு பார்த்த இளங்கோவன் சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்துல 'இப்படி பேசினது சரியா. ராஜீவ்காந்தி, ராகுல்காந்தியை இப்படி பேசினது நியாயமா. மேடையில உட்கார்ந்திருந்த மத்திய மந்திரி அழகிரிகூட சும்மா பேருக்கு மறுப்பு தெரிவிக்காம இருந்தது அந்த பேச்சாளரை உசுப்பி விடுறதாதானே அர்த்தம். அத கேட்குற காங்கிரஸ்காரன் எப்படி திமுகவுக்கு வேலை செய்வான்'னு அதிரடியா பேசி நேரம் வரும்போது அந்த சிடியை வெளியிடுவேன் என்று போட்டு தாக்கிவிட்டார்.அம்புட்டுதான் கலைஞர் சும்மா கலங்கி போயிட்டார்.இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் 'சாணக்கியத்தனம்' எடுபமான்னு தெரியதுப்பா. அதான் கலங்கியிருக்கார். உடனடியா அந்த திமுக பேச்சாளர் வாகை முத்தழகனை கட்சியிலிருந்தே நீக்கியிருக்கார்..."
"அப்பாடா. அந்த பேச்சாளரை நீக்கியிருக்கார் இல்ல. பிரச்சனை ஏதுமில்ல..." என்று குறுக்கிட்டார் சித்தன்..
"சித்தா நீங்க வாய மூடிக்கணும். இந்த கூட்டம் முழுதும் பேசவே கூடாது. அதான் உங்களுக்கு தண்டனை" என்று கோபம் காட்டின சுவருமுட்டி 'பிரச்சனையே இனிமேல்தான். நேரம் வரும்போது அந்த சி.டியை வெளியிடுவோம்'னு இளங்கோவன் சொன்னதில் ஆயிரம் அர்த்தம் இருக்குன்னு கலைஞருக்கு தெரியாதா. டெல்லி மூலமா அந்த சி.டி எப்போ வரும் எப்படி வரும்னு ரொம்பவே யோசிக்குறாராம். அப்படி அந்த சி.டி வெளிவரும் பட்சத்தில் திமுக- காங்கிரஸ் உறவு கோவிந்தாதான்னும் கணக்கு போடுறாராம்..."என்றார் சுவருமுட்டி.
"இது என்னப்பா லொள்ளா இருக்கு. அதான் தவறா பேசின அந்த பேச்சாளரை கட்சியை விட்டே தூக்கிட்டாரு இல்ல.பிறகு ஏன் காங்கிரஸ் கோபப்படப் போகுது. அந்தளவுக்கு மான ரோசம் எல்லாம் காங்கிரஸுக்கு இருக்கா என்ன.எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு" என்று கோபாலை மறித்த அன்வர் பாய்...
''சுவருமுட்டி சொல்றதுல அர்த்தம் இருக்கு. ஏன்னா இன்னும் அந்த 'அம்மா' ஓயவில்லை. வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையா இன்னும் காங்கிரஸ் கட்சி மரத்துல ஏற முயற்சி செய்துகிட்டே இருக்காங்க. இதுக்கு முந்தின காலத்துல கர்நாடகா மாநில தொடர்பு மூலமா டெல்லிக்கு தூதுவிட்டு பார்த்தார். அதுதான் இழுபறியா போயிடுச்சு. இப்போ கொடநாடு எஸ்டேட் ஓய்வு மூலமா பக்கத்தில் இருக்கிற கேரள தொடர்பு வழியா திரும்பவும் முயற்சி செய்யுறாங்களாம். அதான் எந்த நேரத்திலும் அரசியல் சூழ்நிலை மாறும்னு நினைக்கிறாங்க. கலைஞரும் அதுக்குதான் கலங்கிட்டு இருக்காரு. என்னதான் காங்கிரஸும்- திமுகவும் ஒட்டி உறவாடிகிட்டு இருக்கோம்னு சொன்னாலும்கூட, நம்பவச்சு கழத்தறுக்கிறதுல காங்கிரஸும் கில்லாடி இல்ல.மாலைநேர கூட்டத்தில் ஜனநாயகப்படி நடந்துகொள்வோம்னு பேசிட்டு, நைட்டு நடு சாமத்தில் எமர்ஜென்சிய கொண்டு வந்து விடியறதுக்குள்ள திமுக ஆளுங்களை உள்ள தூக்கி கம்பி எண்ண வச்சதுதானே காங்கிரஸ் கட்சி... கலைஞரும் தெரிஞ்சு வச்சுகிட்டுதான் இருக்கிறார்.." என்றார்
"சரி. அது பெரிய இடத்து விவகாரம். விதைப்பதைதானே அறுக்க முடியும். விடுங்கப்பா. நம்ப டாக்டர் ஐயா ராமதாஸ் இருக்காரில்ல திடீர்னு சவுண்டை மாத்துறாரே என்ன விஷயமாம்" - அன்வர் பாய்.
''அதுவா. நேத்து வரைக்கும் தூங்கிட்டு இருதிருப்பார் போல. திடீர்னு 'காங்கிரஸ் கட்சி தலைமையில மூணாவது அணி அமையணும். அப்படி வந்தா வரவேற்கிறேன்.ஆனா அந்த கூட்டணில பாமக இருக்குமா இல்லையான்னு இப்போ சொல்ல முடியாது'ன்னு ஆருடம் சொல்றார். பிறவு என்னாடன்னா 'எனக்கும் விஜயகாந்துக்கும் என்ன இருக்கு. ரெண்டு பேருக்குள்ள சண்டை எல்லாம் எதுவும் இல்லையே. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்ல.நண்பனும் இல்ல தெரியுமா. ரெண்டு பேரும் ஒன்னா இருக்கவும் தயார்தான்னு சொல்றார். என்னதான் ஆச்சுன்னு தெரியலை அவருக்கு.திடீர்னு பார்த்தா மாநிலங்கள் அவைக்கு எங்களோட ஆதரவு இருந்ததால்தான் திமுகவால உடனடியா கொண்டு வர்ற முடிஞ்சது. அப்போ ஒரு எம்.பி. சீட்டு தர்றதா சொன்ன திமுக திரும்பவும் எமாத்திடுச்சு. துரோகம் பண்ணிடுச்சுன்னு புலம்புறாரு. இதையெல்லாத்தையும் வச்சு கூட்டி கழிச்சி பார்த்தா, 'டெல்லி காங்கிரஸ் கட்சி வர்ற சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணிய கொண்டு வரப்போகுதுன்னே தோணுது. அதாவது காங்கிரஸ்-விஜயகாந்த்தோட மற்ற சிறிய கட்சிகளை சேர்த்துகிற திட்டம். அதுல எங்களையும் சேர்த்துக்கோங்க. மூணாவது இடத்தையாவது கொடுங்கன்னு சொல்றாரு போல. பாவம் எத்தனை நாளைக்குதான் இந்த திமுக- அதிமுக கட்சிங்ககிட்ட மோசம் போறது. சும்மா துரோகம் செய்தாங்கன்னு சொல்றது..." என்று கோபால் கூற அலப்பறை டீம் சிரித்தது.
" என்னமோ அவரு இப்பதான் புதுசா காங்கிரஸ் கட்சி தலைமையில மூன்றாவது அணின்னு சொல்ற மாதிரியில்ல பேசுறீங்க.போன நாடாளுமன்ற தேர்தலப்போவே வரிஞ்சி கட்டிகிட்டு நின்னவர்தானே. ஒரு பக்கம் ஈழப்போர் நிறுத்தத்துக்கு ஆதரவா போராடிகிட்டே, அந்த போரை நடத்திகொண்டிருப்பதே காங்கிரஸ் கட்சிதான்னு தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தப்போவே கடைசி கட்ட வரைக்கும் மகனை மந்திரி பதவியில வச்சிருந்துட்டு காங்கிரசு தலைமையில் ஒரு அணி உருவாகணும். திமுக- அதிமுக வேண்டாம்னு சொன்னவர்தானே என்று மற்ற கட்சி ஆளுங்க பேசுறாய்ங்க. நமக்கெதுக்கு பொல்லாப்பு" என்ற கோபால் "நாம் தமிழர் கட்சி சீமானை மறந்துட்டீங்களேப்பா. அவரைப்த்தி ஒரு விஷயமும் இல்லையா" என்றார்.
"ஏனில்லை. நிறைய இருக்கு. வேலூர் சிறைக்குள்ள அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியிருக்கு. கலைஞர் புண்ணியத்தில் சிறைச்சாலையிலும் கட்சியோட ஒரு கிளையை ஆரம்பிச்சிருக்கார் சீமான். நான்கூட போய் பார்த்துட்டு வந்தேன். ஆள் கொஞ்சம் இளைச்சிருக்கார். ஆனால் சீற்றம் குறையவில்லை. அந்த ஒத்தை ஆளை வெளியே விட்டால் திமுகவோட ஓட்டு வங்கி பாதிக்கும்ங்கிறதுதான் கலைஞரோட கவலை. அதான் முடக்கி வைக்கிறார். ஆனால் அடங்க மாட்டேன்ங்கிறார் சீமான். 'தேசிய பாதுகாப்பு சட்டம் போட்டது செல்லாது, விரைவில் வெளியே வந்துடுவேன். பிறகு பாருங்க. நிறைய திட்டம் இருக்கு'ன்னு சீறினார். திமுகவும் வேண்டாம். அதிமுகவும் வேண்டாம். தனி வழிதான்னு இருக்கிறார். இதுக்கு மத்தியில நாம் தமிழர் கட்சி சார்பா போடுற கண்டன பொதுக்கூட்டத்துல அதிமுக சூத்ரதாரியான ம.நடராஜனும் அடிக்கடி உள்ள நுழைந்து பேசிகிட்டு வர்றார். அதுதான் ஒரு சிக்கலா இருக்குன்னு ஆதரவாளர்கள் பார்க்கிறாய்ங்க. சீமானை கேட்டால் 'கொஞ்சம் இருங்க. வெளியே வந்த பிறவு எல்லாமும் சரியா போயிடும். நடராஜன் நம்ப கைதுக்கு கண்டனம் தெரிவிக்கதான் கலந்துக்கிறாரு. அதே நேரத்தில் அதிமுக கட்சி சார்பா இல்ல. அப்படி கட்சி சார்பா கலந்துக்கிறதா இருந்தா அடுத்த நிமிடமே அவரை வேண்டாம்னு ஒதுக்கிடுவோம்'னு சொல்றார்" என்றார் சுவருமுட்டி.
"என்னமோப்பா. அவரு உள்ள இருக்கிற நேரம் பார்த்து நம்ப பக்கம் இழுக்கலாமான்னு ஆளாளுக்கு ஒரு கணக்கு போடுறாய்ங்க. சீமானும் அதை கவனிச்சுகிட்டுதான் இருக்கிறார்.நாமும் பொறுத்திருந்து பார்க்கலாம். முதலில் அவர் வெளியே வரட்டும். பிறகு எப்படி போகுதுன்னு பார்ப்போம்" என்றபடியே எழுந்தார்கள். சித்தன் தனித்து விடப்பட்டார். அடுத்தமுறை ஒழுங்காக கூட்டத்தை கூட்டுவார் என்ற எதிர்பார்ப்பு அவர் நெளிந்ததில் இருந்து தெரிந்தது. |