Dotcom Spl >> CinemaReviews
 
03.09.11     மங்காத்தா
மங்காத்தா- விமர்சனம்

'தல' நெகட்டிவ் ரோலில் நடித்தால் படம் ஹிட்..! வாலி, பில்லா...இப்போது மங்காத்தா.

நாற்பது வயதின் துவக்கத்திலிருக்கும் அஜீத், ஒப்பனை இல்லாத முகத்துடன் தலையிலும் முகத்திலும் வெள்ளை முடியுடனும், லேசான தொப்பையுடனும் நிஜ அஜீத்தாகவே படம் முழுவதும் வலம் வருகிறார். ஒப்பனை இல்லாத அஜீத்தின் முகம் போலவே அவரது மனசுக்கும் கிடைத்திருக்கும் ரசிகர்கள், விசில் சத்தத்தில் படத்தின் ரீரெக்கார்டிங்கையே மறைக்கிறார்கள்.

கிரிக்கெட் சூதாட்டத்திற்காக 500கோடி ரூபாய் கறுப்புப்பணம் மும்பையில் கைமாறும் சமயத்தில், அதைக் கொள்ளையடிக்க முயலும் நால்வருடன் சஸ்பெண்ட் ஆகியிருக்கும் போலீஸ் அதிகாரியான அஜீத்தும் கூட்டு சேருகிறார். பெரும் பணத்தை சூதாட்டத்தில் இழந்த ஜெயப்பிரகாஷூம், போலீஸ் அதிகாரியான அர்ஜூனும் அஜீத் கூட்டணியை விரட்டுகிறார்கள். 500கோடி ரூபாய் பணத்திற்காக நடக்கும் பரபர சேசிங்தான் மங்காத்தாவின் திரைக்கதை.

நரைத்த தாடியுடனும் எப்போதும் புகையும் சிகரெட்டுடனும் தனக்கே உரிய தனி ஸ்டைலில் அஜீத் படம் முழுவதும் ரசிகர்களை விசிலடிக்க வைக்கிறார். நாற்பது வயது மெச்சூரிட்டியுடன் புத்திசாலித்தனமாக திட்டமிடுவதும், பணத்திற்காக எதற்கும் துணியும் கேரக்டர் அஜீத்திற்கும் தமிழ் சினிமாவிற்கும் புதிய விஷயம். ஒரு வருஷத்துக்கு தல-க்கு இந்தப்படம் போதும்பா. அஜீத்தின் ரசிகர்கள் மட்டுமல்லாது படம் பார்க்கும் வெகு ஜனங்களும் இந்த வார்த்தையை முணுமுணுக்கிறார்கள்.

அஜீத் ஒரு மாஸ் ஹீரோவாக இருந்தாலும் எந்தவித ஈகோவும் இல்லாமல் படம் முழுக்க அர்ஜூன், ராம்ஜி, ஜெயப்பிரகாஷ், த்ரிஷா, வைபவ், லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா என எல்லோரையும் பேர் சொல்லும் விதமான கேரக்டரில் வலம்வர இடம் தந்திருக்கிறார். த்ரிஷாவுடன் தல-க்கு கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது. காதல் காட்சிகளில் த்ரிஷா அழகு என்றால் தல செம அழகு.

தல-க்கு இணையான கேரக்டரில் அர்ஜூன் அமர்க்களப்படுத்துகிறார். தலயும் அர்ஜூனும் மோதும் காட்சிகளில் அனல் பறக்கிறது. படம் முழுக்க ஏகப்பட்ட கேரக்டர்கள் சற்றே அலுப்பூட்டுகிறது. தல இருக்க பயம் எதுக்கு? என நினைத்தாரோ என்னவோ இயக்குநர் வெங்கட்பிரபு. கதை நகர்த்துவதில் ரொம்பவே குழப்புகிறார். அஜீத் போலீஸ்காரர் என்று தெரிந்தும் ஜெயப்பிரகாஷ் சந்தேகப்படாதது ஏன்? மும்பையில் உள்ள எல்லோருமே எப்படி தமிழிலேயே பேசுகிறார்கள்? அஜீத் பணத்துக்காக எதையும் செய்யத் துணிவதற்கு காரணம் என்ன? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்தாலும் தல அவற்றையெல்லாம் தன்னுடைய நடிப்பிலும் மேனரிசத்திலும் மறைத்து விடுகிறார்.