Dotcom Spl >> PoliticsBazzar
 
01.09.09      அண்ணா போற்றி! அண்ணனே போற்றி!
அண்ணா போற்றி! அண்ணனே போற்றி!

* அறிவாலயத்தில் கலைஞருக்கு தனி அறை உண்டு. அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் போன்ற சீனியர் தலைவர்கள் இங்கு சகஜமாக சென்று வருவர். துரைமுருகனிடம் இருந்த பொதுப்பணித்துறையை கலைஞர் தன்வசம் எடுத்துக் கொண்டபிறகு துரைமுருகன், கலைஞரின் அறைக்குள் செல்வதில்லை. வெளியில் ஹாலில் அமர்ந்து விட்டு அப்படியே வெளியேறி விடுவார். முக்கியமான விவாதங்களில் கலந்து கொள்வதில்லை.

 இந்நிலையில் சிலநாட்களுக்கு முன்பு அண்ணாவைப் போற்றி கழக நாளேட்டில் துரைமுருகன் எழுதிய கட்டுரைகளில்  அண்ணனையும் (கலைஞரை) போற்றியிருந்தார். அவற்றைப் படித்த கலைஞர் ரொம்பவே குளிர்ந்து விட்டாராம். இதன் பலன் விரைவில் துரைமுருகனுக்கு கிடைக்கலாம் என்கிறது அறிவாலய வட்டாரம்.
* * * * *
ஆரம்பிச்சுட்டாங்கய்யா...ஆரம்பிச்சுட்டாங்க!
* அ.தி.மு.க, பா.ம.க.வில் இருந்து முக்கியத் தலைவர்களை தி.மு.க.வுக்கு கொண்டு வரும் வேலை, தீவிரமாக நடந்து வருகிறது. அம்மா கட்சியின் வாசமான நிர்வாகி ஊஹும்...வரமாட்டேன். அம்மா கூடத்தான் இருப்பேன் என்று அடம்பிடித்தாலும் அவரிடமும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறதாம். "அ.தி.மு.க, பா.ம.க.வில் இருந்து எப்படியும் மூன்றில் ஒரு பங்கு நிர்வாகிகளைக் கொண்டு வந்து விட வேண்டும் என்பது எங்களுக்குப் போடப்பட்டிருக்கும் கண்டிப்பான உத்தரவு. வெளிநாடு சென்றிருக்கும் இளைய தலைவர் திரும்பியதும் பிரம்மாண்ட சேர்ப்புவிழா இருக்கும் பாருங்கள்" என்கின்றன சில உடன்பிறப்புகள்.
 
* தி.மு.க.வுக்கு பதிலடி கொடுக்க அ.தி.மு.க.வும் தயராகி வருகிறது. தி.மு.க.வில் மாவட்ட அளவில் இருக்கும் சில அதிருப்தி தலைவர்களை இழுத்து ஷாக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். இதற்காக அம்மாவுக்கு விசுவாசமான மாஜி அமைச்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

* பா.ம.க.வும் தன் பங்குக்கு சும்மா இருக்காமல் தி.மு.க.அரசின் திட்டங்களில் ஏதாவது ஓட்டை உடைசல்கள் இருக்குமா என ஆராயத் தொடங்கியிருக்கிறது. அண்மையில் முதல்வரால் அறிவிக்கப்பட்டு வரவேற்பைப் பெற்ற தமிழக அரசின் இலவச காப்பீட்டுத் திட்டத்தில் ஏதாவது குறைகள் சிக்குமா என ஆய்வு நடத்தி வருகிறதாம் பா.ம.க குழு ஒன்று.
* * * * *

சிபாரிசுக்கு நோ!
* தமிழக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்டிருக்கும் அதிகாரப்போட்டி, முதல்வரை வருத்தப்பட வைத்துள்ளது. நேரடி விசாரணை நடத்தி வருகிறார். விரைவில் சில உயர் அதிகாரிகள் மாற்றப்படலாம். இந்த விஷயத்தில் யாரும் யாருக்கும் சிபாரிசு செய்து வரக்கூடாது என முதல்வர் கண்டிப்பாக கூறி விட்டாராம். இந்நிலையில் ஆதரவு கேட்டுவந்த சில அதிகாரிகளை, எங்களால் எதுவும் செய்ய முடியாது எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டதாம் பெரிய இடத்து அதிகார மையங்கள்.
* * * * *

விரைவில் விளக்கம்!
* நடிகர் விஜய், காங்கிரசில் சேரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் அவர் காங்கிரசில் சேரக்கூடாது என இலங்கைத் தமிழர் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவரது படங்களைப் புறக்கணிப்போம் என உலகத் தமிழ் அமைப்புகள் அறிவித்துள்ளன. இது தமிழ் உணர்வாளரான விஜயையும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரையும் தர்மசங்கடத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஜய் தரப்பிலிருந்து அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகலாம்.