* காங்கிரஸ்காரர்கள் எளிமைக்கு எடுத்துக்காட்டாக காலம்சென்ற முன்னாள் அமைச்சர் கக்கனை குறிப்பிடுவர். அவரது நூற்றாண்டுவிழா தமிழகஅரசு சார்பில் மதுரை மேலவளவு பக்கமுள்ள தும்பைப்பட்டியில் நடைபெற உள்ளது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மாநில அமைச்சர் பரிதி இளம்வழுதி பங்கேற்கின்றனர். விழாச்செலவு ரூ.3லட்சம். சென்னையில் அண்ணா நூற்றாண்டு விழா நிறைவுவிழாவுக்கு 80லட்சம் வரை செலவு செய்த அரசு இதை ஏதோ பெயரளவுக்கு நடத்துகிறது என புலம்புகின்றனர் சில காங்கிரசார்.
இதற்கிடையே கக்கன் தொடர்பான புகைப்படங்கள், அரிய தகவல்களை அரசிடம் சேர்க்கலாம் என்ற நல்லெண்ணத்துடன் கக்கனின் மகன், செய்தித்துறை உயர்அதிகாரி ஒருவரை பார்க்கச் சென்றுள்ளார். ஓய்வு

பெற்ற அரசு மருத்துவர், வயதானவர் என்று கூட பார்க்காமல் கக்கன்மகனை நிற்க வைத்தே பேசி அனுப்பிவிட்டாராம் அந்த அதிகாரி. இந்தச் சம்பவமும் வில்லங்க விதைகளைத் தூவியுள்ளது.
* செங்கல்பட்டு சிறப்பு அகதிகள் முகாமில் இலங்கைத் தமிழர்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களை சாதாரண முகாம்களில் மாற்றக்கோரியே இந்தப் போராட்டம். இதில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த 3பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாம். இதனையடுத்து முதலமைச்சரிடம் திருமாவளவன் மனு கொடுத்துள்ளார். பல தமிழ் அமைப்புகளும் செங்கல்பட்டுக்கு விரைந்துள்ளன.
* வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க- காங்கிரஸ்- தே.மு.தி.க கூட்டணி அமைக்க காங்கிரஸ் தலைவர்கள் சிலர் சத்தமின்றி ஏற்பாடுகள் செய்து வருகிறார்களாம். அதனாலேயே கூட்டணியில் இருந்து பா.ம.க தானாக வெளியேறும் வகையில் அ.தி.மு.க நடந்து கொண்டதாக

கூறப்படுகிறது. அடுத்து ம.தி.மு.க.வுக்கும் இதேபோன்ற ட்ரீட்மெண்ட் கிடைக்கலாமாம். காங்கிரசுடன் கூட்டணி சேருவதற்கே இந்த ரூட் கிளீயர் நடவடிக்கைகள் என்கிறார்கள்.
* பெரும்பாலானோர் எதிர்பார்த்தபடி 2010-ல் தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. ஜுலை மாதம் உலகத்தமிழ் மாநாடு நடக்க உள்ளது. அது முடிந்த பிறகு 2011-ல்தான் தேர்தல் இருக்கும் என்கிறார்கள். உலகத்தமிழ் மாநாட்டையும் ஒரு சாதனையாக்கிக் கொண்டு அதனைத் தொடர்ந்து வாக்காளர்களைக் கவரும் வகையில் கலைஞர் புதுப்புது திட்டங்களை அறிவிக்கலாம் என்கிறது அறிவாலய வட்டாரம்.