Dotcom Spl >> CinemaReviews
11.12.10      சித்து +2
ண்பதுகளில் பாக்யராஜ் நடித்து வந்திருக்க வேண்டிய படம்,2010-ல் அவரது மகன் சாந்தனு நடித்து வந்திருக்கிறது.கதை-கிருஷ்ணா டாவின்ஸி, திரைக்கதை-வசனம்-இயக்கம் கே.பாக்யராஜ். வழக்கமான டபுள்மீனிங் டயலாக்,அசட்டுத்தனமான காமெடி எனும் டிரேட் மார்க்கோடு படம் இருக்கும் என தியேட்டருக்குப் போனால்...ஏமாற்றமே மிஞ்சுகிறது. இந்தியாவின் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியரை சித்து +2வில் காணவில்லை.
 
+2 படிக்கும் சாந்தனு, +2 படிக்கும் சாந்தினி இருவருக்கும் வீட்டில் பிரச்னை. 'தான் பெயிலாகிவிடுவோம். அதனால் டாக்டராகும் கனவு தகர்ந்துவிடும்.அந்த அவமானம் தனக்கு நேரவேண்டாம்'என பழனியிலிருந்து சென்னைக்கு ரயிலேறுகிறார் சாந்தினி. 'இந்த முறை நீ +2வில் பெயிலானால் நான் விஷம் குடித்து தற்கொலை செய்வேன்' என மிரட்டும் கொடுமைக்கார அப்பாவிற்கு பயந்து கோவையிலிருந்து சென்னைக்கு ரயிலேறுகிறார் சாந்தனு. இருவரும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்திக்கிறார்கள். சென்னை நகரம் முழுதும் சுற்றுகிறார்கள். கிழக்கு கடற்கரை சாலையில் டான்ஸ் ஆடுகிறார்கள். நேரு ஸ்டேடியத்தில் படுத்துறங்குகிறார்கள். கைவசம் இருக்கும் முப்பதாயிரம் ரூபாய் தீர்ந்ததும் தற்கொலை செய்து கொள்வதாக நினைக்கும் சாந்தனுவின் மனதை சாந்தினி மாற்றுகிறாள்.சாந்தினி டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதை அறிந்து சாந்தனு அவளை ஊருக்கு அனுப்பிவைக்கிறான். சென்னையில் ஒன்றாக தங்கியிருந்த நாட்களில் அவர்களுக்குள் காதல் மலர்கிறது.தன்னை தற்கொலை எண்ணத்திலிருந்து மாற்றிய அவளுக்காக வாழவேண்டும் என அவளது ஊருக்கு வருகிறான்.
 
அவள் வீட்டுக்கு எதிரே இருக்கும் கஞ்சா கருப்புவின் சலூன் கடையில் தங்குகிறான்.அவளது அப்பாவின் மனதில் இடம் பிடித்து வேலைக்-காரனாக அவளது வீட்டுக்குள் நுழைகிறான்.அங்கே அவளுக்காகவே வாழும் முறைமாமனுக்கு அவளை திருமணம் செய்ய நாள்குறிக்க, சாந்தனு, சாந்தினியை அழைத்துக்கொண்டு ஓடுகிறான். கொடுமைக்கார அவளது அப்பாவும்,முறைமாமனும் அவர்களைப் பிடிக்க அடியாட்களோடு துரத்துகிறார்கள். அது மட்டுமில்லாமல் சென்னையிலிருந்து சாந்தனுவை என்கவுன்டரில் போட்டுத்தள்ள ஒரு இன்ஸ்பெக்டர் ஆவேசமாக வருகிறார். பரபர கிளைமாக்ஸில் எல்லோரும் நல்லவர்கள் ஆகிறார்கள். சாந்தனுவையும் சாந்தினியையும் சேர்த்து வைக்கிறார்கள்.

 பார்த்து பார்த்து அலுத்துப்போன திரைக்கதை. இரண்டரை மணி நேர படத்தில் வசனகர்த்தா பாக்யராஜ்தான் நம்மை காப்பாற்றுகிறார். அங்கங்கே இரட்டை அர்த்த வசனங்கள் இருந்தாலும் நெளிய வைக்காமல் சிரிக்க வைப்பது பாக்யராஜின் ஸ்பெஷல் சாமர்த்தியம்

 படத்தின் நாயகன் சாந்தனு, சண்டைக்காட்சிகளிலும் டான்ஸிலும் பின்னியெடுக்கிறார்.நடிப்பில் நல்ல முயற்சி தெரிந்தாலும் அங்கங்கே அப்பாவின் மேனரிசத்தை அவரால் தவிர்க்க முடியவில்லை. கதாநாயகி சாந்தினி படத்தின் மிகப்பெரிய மைனஸ். நடிப்பில் படு செயற்கைத்தனம் தெரிகிறது.

 ராசாமதியின் ஒளிப்பதிவு கண்களுக்கு ஆறுதலாகிறது. திரைக்கதை, லாஜிக் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படம் பார்த்தால் சிரித்துவிட்டு வரலாம்.
 
சித்து +2, சிரிப்பதற்கு மட்டும்.